ராமநாதபுரம், அக். 15-

மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் சரிவர பராமரிக்காததால் அடைப்பு ஏற்பட்டு கழிப்பறைகளை பூட்டியுள்ளனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். பல ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் பஸ்ஸ்டாண்டில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் 91 கடைகளுடன் ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு 2025 அக்.,3ல் திறக்கப்பட்டது. ஓராண்டிற்கு மேலாகியும் பஸ்ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி சிறிய வடிகால்களில் தேங்குகிறது. கழிப்பறைகள் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் கழிவுநீர் வெளியேறும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால் நேற்று ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பறை மூடப்பட்டது. கழிவுநீர் தேக்கத்தால் துர்நாற்றம் வீசியதால் பஸ் ஸ்டாண்டில் இருந்த பயணிகள் மட்டுமின்றி அருகேயுள்ள வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். பஸ்ஸ்டாண்ட் வளாகத்திற்குள் போதுமான இருக்கை வசதிகளின்றி பயணிகள் தரையில் அமர்ந்து சிரமப்படுகின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் பெயரளவில் வருகிறது. தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் நிலையில் ராமநாதபுரம் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த பல ஆயிரம் பணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறுகையில், பஸ் ஸ்டாண்டில் நேரடியாக ஆய்வு செய்தேன். கழிப்பறையில் நீர் செல்லும் பாதையில் அடைப்பை சரி செய்யும் பணி நடக்கிறது. இன்று சரியாகி விடும் என்றார்.