திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் 2,66,194 பயனாளிகளுக்கு ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2 நாள் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியையும் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 3 இடங்களில் கலைஞர் திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார்.

திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள திடலில் அமைக்கப்பட்டு இருந்த மாநில அளவிலான 2 நாள் வேளாண் கண்காட்சியை நேற்று காலை 10 மணிக்கு முதல்வர் திறந்து வைத்தார். இதற்காக வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலையின் இருபுறமும் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் 50ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்எஸ் தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநகர மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் தர்ப்பகராஜ் வரவேற்றார்.

இதைதொடர்ந்து காலை 11 மணியளவில் திருவண்ணாமலை மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, எம்எஸ் தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ். அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநகர மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் தர்ப்பகராஜ் வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 2,66,194 பயனாளிகளுக்கு ரூ.1,400.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார். திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த வணிக வளாகம், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், மாவட்ட அரசு மாதிரி பள்ளி உள்பட ரூ.631.48 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 314 பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.63.74 கோடி மதிப்பிலான 46 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில், கலசப்பாக்கம், வந்தவாசி, செய்யாறு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவ சிலையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.