திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் நேற்று நீதிமன்ற நிபந்தனைகள் படி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, ஐகோர்ட் கிளை கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது. இதை கோவில் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 'காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
'50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரசியல் விமர்சனம் கூடாது. கோஷம் எழுப்பக்கூடாது. மந்திரம் மட்டுமே உச்சரிக்க வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்து இருந்தார். அதன்படி உள்ளூர் மக்கள் நேற்று காலை 9 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.