மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தி.மு.க. தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் அக்கட்சிக்கு மக்கள் வாக்களி்க்க மாட்டார்கள். அடுத்து ஆளப் போவது அ.தி.மு.க.தான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் மிக பெரிய ஊழல் நடைபெற்றது. நகரமைப்பு பிரிவின் ஊழலுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தவுள்ளோம். இதை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடவும் உள்ளோம். வீடுகளுக்கு அனுமதி பெற்று வணிக வளாகங்கள் கட்டப்படுகிறது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமான நிலையில் நடைபெற்று வருகிறது. மக்களின் பிரச்சனைகளை மாநகராட்சி கண்டு கொள்வதில்லை. மேலும் மக்களின் பிரச்சினைகளை யாரிடம் சொல்வது என்று சூழ்நிலையும் உள்ளது. மாநகராட்சி நிர்வாகமும் எதையும் கண்டுகொள்வதில்லை.
மாநகராட்சிக்கு மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் நியமிக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. தி.மு.க. தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தி.மு.க.அரசு நான்கே முக்கால் வருடத்தில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது. அ.தி.மு.க. கொண்டு வந்ததிட்டங்களை திறந்து வைக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணி 2 மாதத்தில் நிறைவடையும் என்று கூறினார்கள். ஆனால் கனிமொழி எம்.பி.யாக இருப்பதால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேசதரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யார் என்ன பேசினாலும் அடுத்த ஆளப்போவது அ.தி.மு.க. மட்டுமே. அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதல்வருக்கு தூக்கம் வராது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அதன் அடிமைகளாக செயல்படுகிறது. ஆனால் அ.தி.மு.க.வைஅடிமை கட்சி என விமர்சனம் செய்கிறது. எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்தார்கள் மறைந்தும் தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக எம்.ஜி.ஆர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.