தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை 12 நாட்கள் சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். போதைப்பொருளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாவதை தடுக்கவும், அதேபோன்று தற்போது சாதிய மோதல்கள், மத மோதல்களை தமிழகத்தில் உருவாக்க சிலர் பார்க்கிறார்கள். அதை தடுப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சகோதரர்களாக ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி 2026 ஆண்டிலும் தொடரவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த நடைபயணம் செல்வதாகவும் வைகோ அறிவித்து இருந்தார்.

முன்னதாக திருச்சியில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை, வைகோ நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அதே போல் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை.வைகோ அழைப்பிதழ் வழங்கினார். அதன்படி வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழா நேற்று திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை திருச்சி சென்றார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கோவி செழியன், கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து நடைபயண தொடக்க விழா நடைபெற்ற தென்னூர் உழவர்சந்தை வரை ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்தார். இதையடுத்து நடைபெற்ற வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. வரவேற்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அருணாசலம், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கவுன்சிலர் சுரேஷ், சிவா, திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசினார்

இதையடுத்து நடைபயணத்தை தொடங்கிய வைகோ, அங்கிருந்து அண்ணா நகர் கோர்ட்டு ரோடு, மேஜர் சரவணன் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ மேம்பாலம், கிராப்பட்டி மேம்பாலம், எடமலைப்பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் சென்று முதல் நாள் பயணத்தை முடித்து அங்குள்ள தனியார் அரங்கில் தங்குகிறார். இந்த நடைபயணம் வருகிற 12-ம் தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார். இந்த நடைபயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.