தமிழகத்தில் புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
காற்று, நீர், நிலம் மாசு ஏற்படுத்துவதாக கூறி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து 2020- ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
இந்நிலையில், பசுமை தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி தமிழக தொழில்துறை, சுற்றுச்சூழல் துறை செயலாளர்களுக்கு, கடந்த ஜூன் முதல் நவம்பர் வரை ஆறு மனுக்கள் அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எங்கள் நிறுவனத்தின் மனுக்களை பரிசீலிக்குமாறு, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் விஜய் ஆனந்த் ஆஜராகி, பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக அரசுத்துறை செயலாளர்களுக்கு மட்டுமே மனு அனுப்பப்பட்டுள்ளது. முறையாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்கவில்லை. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கு நிலுவையில் உள்ளன என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நிலுவையில் உள்ள வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். அதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி விசாரித்த நிலையில், புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் புதிய விண்ணப்பத்தை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதில் எந்தத் தடையும் ஏற்படாது என உத்தரவு அளித்துள்ளது.