பா.ஜ.க. தமிழகத்தில் வலுப்பெற்றுவிட்டால் அ.தி.மு.க. இல்லாமல் போய்விடும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன்தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் பா.ஜ.க. இவ்வளவு ஆட்டம்போட காரணமே அ.தி.மு.க.தான். இது மிகப்பெரிய தமிழினத் துரோகம். பா.ஜ.க வளர அ.தி.மு.க. இடம் கொடுத்திருக்கிறது. மீண்டும் அவர்களை தூக்கி தோளில் வைத்து சுமக்கிறார்கள். பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெற்றுவிட்டால் அ.தி.மு.க இல்லாமல் போய்விடும், பெரியார் அரசியலும் இல்லாமல் போய்விடும். இங்கு கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ சுதந்திரமாக நடமாட முடியாது, ஏன் சாதாரண இந்துக்கள்கூட நடமாட முடியாது

பொது சிவில் சட்டம், பாபர் மசூதி இடிப்பு, ஜம்மு காஷ்மீர் பிரச்சினை ஆகியவை குறித்து, அதாவது மதவாத அரசியலே பேசக்கூடாது என நிபந்தனை விதித்த பிறகுதான், கருணாநிதி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தார். தேர்தல் கூட்டணி என்பது வேறு. அ.தி.மு.க. இப்போது செய்வது வேறு. பா.ஜ.க.வுடன் நட்பில் இருந்த கருணாநிதிதான். பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்தார். ஓட்டுக்காக கூட்டணி வைத்த அதே நேரத்தில் கருத்தியலில் உறுதியாக இருந்தது தி.மு.க.. ஆனால் அ.தி.மு.க. கருத்தியல் அடிமையாக மாறி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வின் அரசியலையே, அ.தி.மு.க.வும் பேசுகிறது. இது தமிழகத்துக்கு உகந்தது அல்ல. அவர்கள், தி.மு.க.வுக்கு எதிராக அல்ல, நாமெல்லாம் பேசக்கூடிய அரசியலுக்கு எதிராக பேசுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.