கர்நாடகாவில் பா.ஜ.க.வும், ஜே.டி.எஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் கூட்டணியில் உள்ளன. இந்நிலையில் தான் கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது. ஜே.டி.எஸ். தனித்து தான் போட்டியிடும் என்று அந்த கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 2023-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் ஜே.டி.எஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தனித்து களமிறங்கியது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு 2024-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வும், ஜே.டி.எஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து அதிக இடங்களை கைப்பற்றியது. ஜே.டி.எஸ் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் கர்நாடகா முதல்வருமான குமாரசாமி மண்டியாவில் போட்டியிட்டு எம்.பி.யானார். இவர் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் ஸ்டீல் துறையின் கேபினட் அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா அறிவித்துள்ளார். இவர் தற்போது ராஜ்யசபா எம்பியாகவும், ஜே.டி.எஸ். கட்சியின் தேசிய தலைவராக உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெங்களூரில் உள்ள ஜே.டி.எஸ். கட்சி அலுவலகத்தில் தேவேகவுடா பத்திரிகையாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.