இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, மத்தியமேற்கு- தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.