மதுரை: தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சங்க மாநிலப் பொருளாளர் ரகுநாதராஜா கூறியதாவது:
மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் 2030 ல் கார்பன் உமிழ்வை (எமிஷன்) 40 சதவீத அளவு குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக 100 கிலோவாட்டுக்கு மேல் மின்நுகரும் அத்தனை நிறுவனங்களுக்கும் தனியாரிடம் இருந்து மின்கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது.
மின் உற்பத்தி செய்யும் தனியாரிடம் இருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.2.50 முதல் ரூ.20 வரை கட்டணம் செலுத்தி தமிழக அரசு மின் கொள்முதல் செய்கிறது. தனியாரிடம் வாங்கி எங்களுக்கு விற்பதன் மூலம் அரசுக்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.10 முதல் ரூ.12 வரை இழப்பு ஏற்படுகிறது.
தொழில் நிறுவனங்கள் தனியாரிடம் இருந்து நேரடியாக மின் கொள்முதல் செய்யும் போது, ஒரு யூனிட்டிற்கு ரூ.5.50 தான் செலவாகிறது. இதன் மூலம் எங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.3.50 வரை மிச்சமாகி உற்பத்திச் செலவு கணிசமாக குறைகிறது.
அரசின் ‘கிரிட்’ வழியே மின்சாரம் செல்வதால் ‘வீலிங் சார்ஜஸ்’ என்ற பெயரில், அரசுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.20 வரை கட்டணம் செலுத்துகிறோம். இதனால் தமிழகத்தில் உள்ள சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை உபரி வருமானம் கிடைக்கிறது. எங்களுக்கு கொள்முதல் அனுமதி கொடுத்தால், தனியாரிடம் அதிக விலைக்கு வாங்கி நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு கொடுப்பதால் அரசுக்கு ஏற்படும் நஷ்டமும் தவிர்க்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.300 என கணக்கிட்டால் மொத்தம் ரூ.600 கோடி வரை உபரி வருமானமாக லாபம் கிடைக்கும்.
உயர் மின்னழுத்தம் பயன்படுத்தும் எச்.டி., நிறுவனங்களுக்கு மட்டும் தனியார் மின்கொள்முதலை மாநில அரசு அனுமதித்துள்ளது. 55 எச்.பி., திறனுக்கு மேல் உள்ள அனைத்துத் தொழில் (எல்.டி.சி.டி.,) நிறுவனங்களுக்கும் தனியார் மின் கொள்முதலை நேரடியாக அனுமதித்தால் அரசுக்கு நஷ்டமில்லை என்றார்.