மதுரை, அக். 11-

தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு கட்டட அனுமதி வழங்கும் அதிகாரத்தை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் கட்டடங்கள் கட்டும்போது அந்தந்த நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட பரப்பிலான கட்டடங்களை கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கே இவற்றுக்கு அதிகாரம் உள்ளது.

அதிக பரப்பிலான கட்டடங்களை கட்டுவதற்கு, சென்னையில் உள்ள நகர் கட்டமைப்பு இயக்குனரகம் (டி.டிசி.பி.,), சி.எம்.டி.ஏ., (சென்னை மெட்ரோ

பாலிடன் டெவலப்மென்ட் அதாரிட்டி) போன்ற அமைப்புகளிடம் ஒப்புதல் பெற வேண்டிய நிலை இருந்தது. அவர்கள் அந்தந்த நகரங்களின் மாஸ்டர் பிளான் அடிப்படையில் ஒப்புதல் வழங்குவர்.

இந்நிலையில் தற்போது உள்ளாட்சி அமைப்பு

களுக்கான அனுமதி வரம்பை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி

த்துறை அதிகரித்துள்ளது. நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 10 ஆயிரம் சதுர அடிகள் வரை கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. தற்போது 16 ஆயிரத்து 140 சதுர அடிகளாக (1500 சதுர மீட்டர்) 16 குடியிருப்புகள் வரை கட்ட அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது.

பேரூராட்சிகள், ஊராட்சிகளில் 10 ஆயிரம் சதுர அடி என்பது 12 ஆயிரத்து 912 சதுர அடியாக (1200 சதுர மீட்டர்) 12 குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கும் வரம்பை அதிகரித்தும், வணிக கட்டடங்களுக்கு (அனைத்து உள்ளாட்சிகளுக்கும்) 2 ஆயிரம் சதுர அடியாக இருந்ததை, தற்போது 5380 சதுர அடி (500 சதுர மீட்டர்) வரை உள்ளாட்சி மன்றங்களே அனுமதி அளிக்கலாம் என்றும் அனுமதி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கால விரயம், பண விரயம் தவிர்க்கப்படும் என புரமோட்டர்கள் தெரிவிக்கின்றனர்.