டிட்வா புயல் காரணமாக தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், டிட்வா புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர், அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் முதல்வர் அறிவுறுத்தினார். மேலும், கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 ஹெக்டர் வேளாண் பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.