கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் பலர் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். பொதுவாக இப்படியான சூழலில் சிக்கன் விலை குறைந்துவிடும். முட்டை விலையும் கடுமையாக சரியும். ஆனால் முட்டை விலை பெரிய அளவில் தினமும் உயர்ந்து வருகிறது.

இந்த சூழலில் தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் வளர்ப்பு கூலி உயர்வு கேட்டு உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் சிக்கன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் அன்னூரில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அணி மற்றும் தமிழக மாநில விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த மாநில அளவிலான ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் கிலோ கோழி இறைச்சி தேவைப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு லட்சம் கிலோ கோழி இறைச்சி தேவைப்படும் நிலையில் பண்ணையாளர்களின் உற்பத்தி நிறுத்த போராட்டம் கோழி இறைச்சி தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன் விலை அதிகரிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.