காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாணவர்களின் கருத்துகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறியும் வகையில், நாடு முழுவதும் மாணவர்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.
அப்போது, கல்வி முறை, தேர்வுகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிகிறார். இதற்காக, மதியம் 2 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ராகுல்காந்தி, மாலை 4 மணிக்கு தீவுத்திடலுக்குச் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, இரவு 8 மணிக்கு டெல்லிக்கு புறப்படுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.
அதன்படி, மதியம் 1 மணி அளவில் ராகுல் காந்தி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் முதலமைச்சர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோர் அவருடன் சென்றனர்.
ராகுல் காந்தியை வரவேற்ற முதலமைச்சர் விஜய் அவருக்கு விருந்து வைக்க உள்ளார். விருந்து முடிந்த உடன் இருவரும் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர். ஒருபுறம் காங்கிரஸ் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் ராகுல் காந்தி - முதலமைச்சர் விஜய் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.