உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்கான சீசன் தற்போது நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று 27-ம் தேதி நடைபெறுகிறது.
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாவை முன்னிட்டு, கடந்த 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 41 நாள் விரதத்தை கடைப்பிடித்து மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரையாக வந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படும் மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. மண்டல பூஜை சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிக முக்கியமாக அனுசரிக்கப்படும் ஒரு புனித விழாவாகும். 41 நாட்கள் நீடிக்கும் இந்த மண்டல பூஜை, மலையாள மாதமான விருச்சிகத்தின் முதல் நாளில் தொடங்கி, தனு மாதத்தின் 11 அல்லது 12-ம் நாளில் நிறைவடைகிறது.
மண்டல பூஜை இன்று காலை 10.10 மணிக்கும் 11.30 மணிக்கும் இடைப்பட்ட சுப முகூர்த்தத்தில் நடைபெற உள்ளது. அன்றைய முக்கிய தீபாராதனை 11.30 மணிக்கு நடைபெறும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் நடைபெறும் பூஜையை காண்பது பெரும் புண்ணியமாக கருதப்படுவதால், அந்த நாளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். மண்டல பூஜை முடிந்த பிறகு, மகரவிளக்கு ஜோதி தரிசனம் மற்றும் திருவிழாவிற்காக வரும் 30-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 15-ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது.