மதுரை மாவட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சியினர் தவிப்பில் உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கடந்த முறை தி.மு.க., மதுரை வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தி, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. மதுரை தெற்கு ம.தி.மு.க.வுக்கும், திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், மேலூர் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டன. இதில், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட திருப்பரங்குன்றம், மேலூர் தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மதுரை தெற்கு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் பூமிநாதன் வெற்றி பெற்றார்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியும், அக்கட்சிகளால் அ.தி.மு.க.வை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை என்ற அதிருப்தி தி.மு.க.வுக்கு ஏற்பட்டது. ஆனால், இந்த தொகுதிகளில் தி.மு.க.வினரே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளடி வேலை பார்த்ததாக அப்போது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக, இந்த முறை தி.மு.க. குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த தொகுதிகள் பட்டியலை, உள்ளூர் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து தி.மு.க. தலைமை முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால், கடந்த முறை வழங்கிய ஒரு தொகுதியை எந்த கூட்டணி கட்சியிடம் இருந்து பெறலாம் என தி.மு.க. தலைமை உள்ளூர் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்த முறை மதுரை மேற்கு, அல்லது தெற்கில் ஒரு தொகுதியையும், காங்கிரஸ் கட்சி வடக்கு தொகுதியையும், மதிமுக ஏற்கெனவே போட்டியிட்ட தெற்கு தொகுதியை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.