தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட மறுவிசாரணையில், கையாடல் செய்யப்பட்ட தங்க நகைகளை பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் மறுஅடமானம் செய்ததாகக் கூறப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில், மறுவிசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. சரவணகுமார் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. ஜெயபால் பர்னபாஸ் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல் செய்யப்பட்ட தங்க நகைகளை, இந்த வழக்கின் முதல் எதிரியான சங்கச் செயலாளர் தேவராஜ், தனது கார் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் மூலம் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் மறுஅடமானம் செய்தது கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், தேவராஜின் கார் ஓட்டுநரான ஆறுமுகநேரி மடத்துவிளையைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மகன் முத்துச்சாமி (47), தேவராஜின் வீட்டில் வேலை செய்து வந்த முத்துச்சாமியின் மனைவி கிருபா (44), திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் அண்ணாநகரைச் சேர்ந்த பூவலிங்கத்தின் மகன் முருகன் (62) மற்றும் தேவராஜுக்குத் தெரிந்த நபரான திருச்செந்தூர் பெருமாள் மகன் இசக்கித்துரை (33) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தி வருகிறார். கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் தங்க நகை கையாடல் மற்றும் அவற்றை மறுஅடமானம் செய்தது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.