களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? என விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: களத்தில் இருப்பவர்கள் பற்றி பேசுவோம். களத்தில் யார் இருக்கிறார்? கட்சி ஆரம்பித்து விக்கிரவாண்டி தொகுதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தலில் நிற்காமல் போனது ஏன்? ஈரோட்டில் வந்து நிற்க வேண்டியது தானே? தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சி மட்டும் தானே மோதியது. எல்லோரும் போய் விட்டார்கள். இந்தியாவை ஆட்சி செய்யும் பா.ஜ.க. வரவில்லை.

அ.தி.மு.க. வரவில்லை. களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? ஈரோடு கடப்பாரை என விஜய் யாரை சொல்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? ஈரோட்டு கடப்பாரையா? அதெல்லாம் துருப்பிடிச்சு, பழைய இரும்புக்கு போட்டு பேரிச்சம்பழம் வாங்கியாச்சு. இப்பதான் தெரிய வருது.. அப்போ தெரியலையா தீய சக்தினு?

என் தம்பிக்கு (விஜய்) ஒரே ஒரு எதிரி தான், ஆனா எனக்கு நாலு எதிரிங்க. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க.ன்னு நாலு பேரோட நான் மல்லுக்கட்டுறேன். தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, அதை தட்டிக்கொடுத்து தான் வளர்க்கணும், ஆனா களத்துல நாங்க யாருன்னு இந்த நாலு பேருக்கும் நல்லாவே தெரியும்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி என மறைந்த தலைவர்களின் பெயரைச் சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவீர்கள்? கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்பது நாங்கள் மட்டும் தான். மற்றவர்கள் சின்னத்தை காட்டியும், பணத்தை காட்டியும் தான் ஓட்டு கேட்கிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால், அது நோட்டில் இருக்கும் காந்திக்கு போடும் ஓட்டு. இவ்வாறு சீமான் கூறினார்.