மதுரை, அக். 11-
பொதுவாக உள்ளாட்சிப் பதவிகளில் உள்ள பெண்கள் முழுமையாக செயல்படுவதில்லை; அவர்களின் கணவர்கள் தான் அதிகாரிகளை இயக்குகின்றனர் என்ற நிலை உள்ளது. ஆனால் அரசு சார்ந்த கூட்டங்களில் கணவர் பங்கேற்பது இல்லை. ஆனால் மதுரை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்களின் கணவர்களின் தலையீடு அதிகரித்து வருகிறது.
கடைசியாக நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு பெண் கவுன்சிலரின் கணவரும் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதன் மீதான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை குறித்து மண்டலம் அளவிலான கவுன்சிலர்கள் கூட்டங்கள் நடந்தன. இதில் பெண் கவுன்சிலர்களுடன் கணவர்களும் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். இதனால் மாநகராட்சி அலுவலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மண்டலம் வாரியாக கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எந்தெந்த வார்டுகளில் மழைநீர் வடிகால்களை துார்வார வேண்டும், அடைப்புகளால் எங்கெல்லாம் மழைநீர் தேங்குகிறது, போக்குவரத்துக்கு சவாலான ரோடுகள் எங்கெல்லாம் உள்ளன, கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மத்திய மண்டலத்தில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர் கணவர் ஒருவர், கிருதுமால், அவனியாபுரம் உள்ளிட்ட கால்வாய்களை துார்வார வேண்டும் உள்ளிட்ட ஆலோசனை வழங்கினார். கவுன்சிலரான மனைவியோ அமைதியாக இருந்தார். கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் போதே கணவர் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்துகிறோம். ஆனால் ‘மனைவியுடன் துணைக்கு வந்தேன்’ எனக் கூறிக்கொண்டே கூட்ட அறைக்குள் இருந்துவிடுகின்றனர் என்றனர்.
கவுன்சிலர்கள் கூறியதாவது: செப்.30ல் நடந்த கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டு நிதி தலா ரூ.10 லட்சத்திற்கு அனுமதிக்கப்படும் என கமிஷனர் கவுரவ் குமார் ஏற்கனவே உறுதியளித்தார். பல மாதங்களாகியும் வார்டு நிதி இழுத்தடிக்கப்பட்டதால் அன்றைய கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணிக்க திட்டமிட்டனர்.
இதையறிந்த கமிஷனர், தி.மு.க., அ.தி.மு.க., காங்., கட்சிகளின் முக்கிய கவுன்சிலர்களை முதல்நாளே சந்தித்து வார்டு நிதி வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனால் அன்றைய கூட்டத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ‘வார்டு நிதி ஒதுக்கப்படும்’ என கூட்டத்தில் உறுதியும் அளித்தார். ஆனாலும் இதுவரை நிதி ஒதுக்கி கமிஷனர் கையெழுத்திடவில்லை. இதுகுறித்தும் மண்டலக் கூட்டங்களில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.