இந்திய, இலங்கை நாட்டினர் சங்க மிக்கும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா, வரும் 27, 28-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கிறிஸ்த வர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழா வரும் 27, 28-ம் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும் என இலங்கையில் உள்ள நெடுந் தீவு பங்குத்தந்தை பத்தி நாதன் தெரிவித்துள்ளார். வரும் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கும்.
தொடர்ந்து திரு ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர்பவனி நடைபெறுகிறது. வரும் 28-ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜை, கூட்டுப் பிரார்த்தனை, பின்னர் கொடியிறக்கம் நடைபெற்று விழா முடிவடையும். இந்தியாவில் இருந்து எத்தனை பயணிகளை அனுமதிக்கலாம் என்ற அறிவிப்பினை இலங்கை அரசு விரைவில் அறிவிக்கும்.