தேர்தல் கமிஷன் இப்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சார் எனப்படும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய தேர்தல் ஆணையம் பாஜகவுக்காக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், மத்திய அரசு தன்னை காலி செய்ய நினைத்தால் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிவிடுவேன் என அவர் எச்சரித்துள்ளார்.
பீகார் தேர்தலுக்கு முன்பு அங்கு எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த சார் பணிகளைத் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மேற்கு வங்கத்தின் போன்கானில் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு எதிரான பேரணியில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா, சார் பணிகள் தொடர்பாக மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார். சார் பணிகளை வைத்து உண்மையான வாக்காளர்கள் யாரையும் நீக்கக்கூடாது என்றும் பீகாரில் பா.ஜ.க தேர்தலின் போது சார் பணிகள் மூலம் விளையாடியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், மேற்கு வங்கத்தில் இதுபோல் நடக்காது என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் தன்னையோ அல்லது தனது மக்களையும் குறிவைத்து பா.ஜ.க. செயல்பட்டால், நாடு முழுவதும் வீதியில் இறங்கி முழு தேசத்தையும் உலுக்கிவிடுவேன் என்று மம்தா எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,
நீங்கள் மேற்கு வங்கத்தில் என் மீதோ அல்லது என் மக்கல் மீதோ குறிவைத்துத் தாக்குதலை நடத்தினால் நான் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்குவேன். தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் பயணிப்பேன். மக்களைச் சந்தித்துச் சிக்கல்களை விளக்குவேன்.
தகுதியான வாக்காளர் ஒருவருடைய பெயரையும் நீக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. மக்கள் பயப்பட வேண்டாம். பா.ஜ.க.வால் என்னுடன் நேரடியாக மோதி வெல்ல முடியாது. நான் மேற்கு வங்க வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். இதனால் தான் என்னை இப்படி காலி செய்ய பார்க்கிறார்கள். என்ன செய்தாலும் பா.ஜ.கவின் முயற்சி வெற்றி பெறாது என்றார்.