ஈரோட்டில் ரூ.278.62 கோடியில் 1.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். மொடக்குறிச்சி அருகே பொல்லான் சிலை, மணிமண்டபத்தையும், சோலாரில் புதிய பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தின் கோவைக்கு சென்றார். அதை தொடர்ந்து நேற்று முன்தினம் கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பின்னர் சாலை மார்க்கமாக மாலை ஈரோட்டிற்கு முதல்வர் வந்தார். அவருக்கு பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர் நேற்று காலை மொடக்குறிச்சி தாலுகா ஜெயராமபுரத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றார்.

அங்கு ரூ.4.90 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் மணிமண்டபம் மற்றும் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து ஓடாநிலை சென்ற அவர், தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, புதிதாக அமையும் சிலை பணியை பார்வையிட்டார்.

தொடர்ந்து ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் பங்கேற்றார். அங்கு ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் உட்பட மாவட்டத்தில் முடிவுற்ற ரூ.235 கோடி மதிப்பிலான 790 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், ரூ.91 கோடி மதிப்பிலான 230 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 304 பயனாளிகளுக்கு ரூ.278.62 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் பேருரையாற்றினார். அதை தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் சித்தோடு ஆவின் வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட, ஆவின் அமைப்பை ஏற்படுத்திய எஸ்.கே.பரமசிவம் சிலையை முதல்வர் திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார்.

பின்னர் சித்தோடு கொங்கு மாளிகை திருமண மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் கார் மூலம் கோவைக்கு சென்று, விமானம் மூலம் சென்னை சென்றார். முதல்வரின் ஈரோடு வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாவீரன் பொல்லானின் கொள்ளுபேரன் வரதராஜன், அவரது மகன்கள் முருகன், வீரன், பழனிசாமி, எள்ளுபேரன் ராஜன் மற்றும் குடும்பத்தினர் சந்தோஷ்பிரியா, லட்சுமி, சந்திரலட்சுமி, கருப்பாள், வீராள், விமலா ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, கவுரவப்படுத்தினார். அவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து, பூமிதான பூமியில் பயனாளிகள் நாச்சம்மாள், தனலட்சுமி, லட்சுமி, மோனிஷா, மைதிலி, கொழந்தாள், சாரதாமணி, தேவி, மல்லிகா, விஜயலட்சுமி, நாச்சாள் ஆகியோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், மதிவேந்தன், கயல்விழி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான் உள்பட பலர் பங்கேற்றனர்.