மகராஷ்டிராவில் முதல் கட்டமாக உள்ளாட்சியில் உள்ள நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேலையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டன

மும்பை மாநகராட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் ஆளும் பா.ஜ.க-வும், சிவசேனாவும் (ஷிண்டே) கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க விதித்த சில நிபந்தனைகளை அக்கட்சி ஏற்கவில்லை. இதனால் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் நிலை இன்னும் உறுதியாகவில்லை.

அதேசமயம் பா.ஜ.க-வும், சிவசேனாவும் 150 தொகுதிகளில் பேசி முடித்து இருக்கின்றன. இதில் 102 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடவும், எஞ்சிய தொகுதிகளில் சிவசேனா போட்டியிடவும் முடிவு செய்துள்ளன. பேச்சுவார்த்தை முடிந்தது போக மொத்தமுள்ள 227 வார்டுகளில் எஞ்சியுள்ள வார்டுகளை சிவசேனாவும், பா.ஜ.க-வும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

பா.ஜ.க இம்முறை மும்பை மாநகராட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதால், இவ்விவகாரத்தில் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறது. அதேசமயம் கடந்த தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனா வெற்றி பெற்ற அனைத்து வார்டுகளையும் தங்களுக்கு ஒதுக்குங்கள் என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க-விடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் பா.ஜ.க தலைவர்கள் விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றனர்.

மற்றொரு புறம் தாக்கரே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இடையேயும் கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே செல்கிறது. இரண்டு பேரும் கூட்டணிப் பங்கீடு தொடர்பாக பலமுறை தனியாகச் சந்தித்துப் பேசி இருக்கின்றனர். ஆனாலும் இன்னும் இரண்டு பேரும் வார்டு பங்கீட்டை இறுதி செய்ய முடிாமல் திணறி வருகின்றனர். இரு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வார்டு பங்கீடு குறித்துப் பேசி வருகின்றனர்.

வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்க இருக்கும் நிலையில், வார்டு பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் செய்ய வேண்டாம் என்று ராஜ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார். தாமதம் செய்வதால் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வது கடினமாக இருக்கும் என்றும் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.