வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று ஈரோடு மாவட்டம் கோபி, கரட்டூரில் உள்ள த.வெ.க கட்சி அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் வீரமங்கை வேலுநாச்சியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். எதிர்கால தமிழகத்தின் நாயகன் விஜய் 2026-ல் முதல்வர் நாற்காலில் அமர போகிறார். தமிழகத்தில் ஆளும் இரு கட்சிகள் மட்டுமே ஆள வேண்டுமா? புதிய கட்சி ஆளக்கூடாதா? தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி வாக்காளர் வரைவு பட்டியலை சரிபார்ப்பு பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

ஓ. பன்னீர் செல்வத்தை பொறுத்தவரையிலும் அவருடன் உள்ள மாவட்ட செயலாளர் த.வெ.க.வுடன் செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். அதனை பொறுத்தவரையில் அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் 2 லட்சம் பேர் முன்னிலையில் தலைவர் விஜய் கருத்துகளை தெளிவாக சொல்லி இருக்கிறார்.

கூட்டணியை பொறுத்தவரையில் யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். கருத்துக்கள் கூறலாம். தலைமை தான் முடிவு செய்யும். பொறுத்திருந்து பாருங்கள். அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய புள்ளிகள் மிக விரைவில் வந்து த.வெ.க.வில் இணைவார்கள். அதை நீங்கள் பார்க்க தான் போகின்றீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.