தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை சிறந்த முறையில் தயாரிப்பதற்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25-ம் தேதி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி நேற்று தொடங்கி உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி. மு.க. தலைமைக் கழகத்தில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பெண்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்களை கவரும் முறையில் தயாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன தகவல்களை இடம்பெறச் செய்யலாம் என்பது பற்றியும், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை எப்போது தொடங்கலாம் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில் இன்னும் சில தினங்களில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களின் கருத்துக்களை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.