தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு அ.தி.மு.க.வும் தயாராகி உள்ளது. இதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. மேலும் சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. தரப்பிலோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் சென்னை வானகரத்தில் நேற்று முன்தினம் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அது பற்றி யாரும் பேசவும் இல்லை.

இதையெல்லாம் பார்க்கும் போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது போன்ற நிலை உருவாகி இருக்கிறது. இவர்களில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கிற தனி அமைப்பை நடத்தி வருகிறார். இது அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத அமைப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த உரிமை மீட்பு குழுவை உரிமை மீட்பு கழகம் என ஓ.பி.எஸ் மாற்றியுள்ளார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இணையவே முடியாத சூழல் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை புதுக்கட்சியாக மாற்றலாமா? என்பது பற்றியும் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோன்ற நிலை ஏற்பட்டால் புதுக்கட்சியை தொடங்கி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஓ. பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஒருவர் கூறும் போது,

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிச்சயம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார் ஒருவேளை அது போன்ற சூழல் ஏற்படாவிட்டால் மட்டுமே அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றிய முடிவை பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவர் கூறினார்.