தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக்கையில், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு சென்னை, தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் 39 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 79 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 96 குடியிருப்புகளுடன் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர் குடியிருப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.
இக்குடியிருப்பின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம், முதல் தளம் முதல் 6-ம் தளம் வரை உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் தலா 450 சதுரடியுடன், குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.