அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் விலை உயர்ந்த புதிய ராமர் சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. தங்கம்போல ஜொலிக்கும் பிரமாண்ட சிலை வைரம், மரகதம் உள்பட விலை உயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரூ. 30 கோடி மதிப்புள்ள ராமர் சிலை கர்நாடகாவைச் சேர்ந்த பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சிற்பக்கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ராமர் சிலை 10 அடி உயாமும் 8 அடி அகலமும் கொண்டது. இதன் மதிப்பு ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து தனி வாகனத்தில் அயோத்தி கோயிலுக்கு ராமர் சிலை கொண்டு செல்லப்பட்டது. சுமார் 1,750 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க, 5 முதல் 6 நாட்கள் ஆகின.
புதிய ராமர் சிலையை வடிவமைத்ததில் தஞ்சையைச் சேர்ந்த திறமையான சிற்பக்கலைஞர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்த சிலை, துளசிதாஸ் கோயிலுக்கு அருகே உள்ள அங்கத் டிலா பகுதியில் நிறுவப்பட்டதால் பரிசீலிக்கப்படுகிறது. நிறுவுவதற்கு முன் சிலை திறப்பு விழா நடத்தப்பட்டு, அதன் பின் நாடு முழுவதும் உள்ள சந்நியாசிகள், மகான்கள் பங்கேற்கும் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெறும்.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சிலை, ராம ஜென்மபூமியில் நிறுவப்பட்டுள்ள ராமர் மூர்த்தியின் அச்சுப் பிரதியாகும். ராமர் பிரதிஷ்டையின் இரண்டாம் ஆண்டு விழா, வரும் 29-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அங்கத் டிலா வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கான பூமி பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.