சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 6 ஆம் வகுப்பு, 7 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் கல்வி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில் (2026-27) இருந்து, 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திறன் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்தே பயிற்சி வழங்கப்படவுள்ளது. மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இதில் மாணவர்களின் கல்வி அறிவுடன், அவர்களின் செயல் அறிவை ஊக்குவிப்பதை திட்டமாக வைத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் திறன் கல்வியை கட்டயமாக்கியுள்ளனர். இதையடுத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இனி 6, 7, 8 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் திறன் கல்வியும் ஒரு பாடமாக இருக்கும்.
இதில் மாணவர்களுக்கு கல்வி கடந்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். ஏ.ஐ., ஐ.டி. கோடிங், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், தோட்டம் அமைத்தல், களிமண் வேலைப்பாடுகள் போன்றவை குறித்து சொல்லிக் கொடுக்கப்படும். முதல்கட்டமாக இந்த ஜனவரி மாதத்தில் இருந்தே ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.