தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை நெருங்கி வருவதால் அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு தேவைக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வைகை அணையில் இருந்து நேற்று காலை முதல் மேற்கண்ட 3 மாவட்டங்களுக்கு 650 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. 8 நாட்களுக்கு 450 மி.கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.85 அடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது.