தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி என அடுத்தடுத்து முக்கிய தலைவர்களை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று 4-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை தமிழகம் வருகை தர உள்ளார். புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் திருச்சியில், மோடி பொங்கல் விழாவிலும் அமித்ஷா கலந்து கொள்கிறார். அமித்ஷா தமிழகம் வருவது தொடர்பாக தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா நடக்கிறது. இந்த விழாவில் அவர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இந்நிகழ்வில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்க இருக்கின்றனர்.
புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்றைய தினம் இரவு திருச்சியில் அமித்ஷா தங்குகிறார். பின்னர் மறுநாள் காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து காலை 11 மணியளவில் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் , சுமார் 2000 பெண்கள் பங்கேற்கும் மோடி பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமித்ஷாவுடன் தமிழக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட மேலிட பொறுப்பாளர்களும் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்தார்.