100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 389 இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் (100 நாள் வேலைத் திட்டம்) சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், அதற்குத் துணை போகும் அ.தி.மு.க.வை விமர்சித்தும், 24-ஆம் தேதி (புதன்கிழமை) தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 389 இடங்களில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு மாற்றங்கள் செய்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் நடத்திய போராட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக் கொள்ளவும் தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இது தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் மத்திய பா.ஜ.க ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.