மதுரை, அக். 9-

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ததாகக்கூறும் தவெக அரசு அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கு கழக பணிமனையில் 86 அரசு நகர பேருந்துகள் இயங்கிவரும் நிலையில் இதில் 74 பேருந்துகள் திமுக ஆட்சி காலத்தில் புதிதாக வாங்கப்பட்டவை, தற்பொழுது தவெக ஆட்சியில் திருமங்கலத்தில் புதிதாக 4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 4 பேருந்துகளும் கிராமங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக கூறும் பயணிகள், திருமங்கலத்தில் பேருந்துகள் பெயரளவுக்கு மட்டுமே இயக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

வெற்றி பயணம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்ட மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் கூறும், பயணிகள் மூதாட்டிகளை நடத்துனர்கள் அலட்சியப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பேருந்துகள் போதிய அளவுக்கு இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள், அலுவலர்கள், கூலித்தொழிலாளர்கள் பேருந்து கிடைக்காமல் வெகுநேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக பயணிகள் கூறுகின்றனர், எனவே அனைவரும் பயன் பெறும் வகையில் அதிகளவில் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.