இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது அடுத்த நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (பிபிஎஸ்) குறைத்து, முக்கிய விகிதத்தை 5 சதவீதமாக கொண்டுவரும் வாய்ப்புள்ளது என யூனியன் வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இது தொடர்பாக யூனியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதகமான மத்திய வங்கியின் கொள்கை வழிகாட்டுதலால், 2026 பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் 25 பி.பி.எஸ் விகிதக் குறைப்பிற்குக் கட்டாயம் வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கி சாதகமான பணவீக்க நிலைமைகள் மற்றும் குறைவான அடிப்படை விலை அழுத்தங்கள் குறித்து பலமுறை குறிப்பிட்டுள்ளது. ஏறத்தாழ 50 பிபிஎஸ் தங்கத்தின் பணவீக்க தாக்கத்தை சரிசெய்தால், ஒட்டுமொத்த பணவீக்க அழுத்தங்கள் இன்னும் மிதமாகத் தோன்றும்.
2026 பிப்ரவரி அல்லது ஏப்ரலில் இறுதியாக 25 பி.பி.எஸ் விகிதக் குறைப்புக்கு வாய்ப்புள்ளது என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பணவீக்கத்திற்கு சாதகமான கொள்கை வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு, இறுதி விகிதக் குறைப்பின் காலத்தைக் கணிப்பது கடினம் என்றாலும், பிப்ரவரி 26 கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 5.0 சதவீதமாகக் குறைக்கும் சாத்தியத்தை நாங்கள் மறுக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம்தான் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்தது. பிப்ரவரி 2025 முதல், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 125 அடிப்படை புள்ளிகள் குறைத்து, அதை 5.25 சதவீதமாக கொண்டு வந்துள்ளது. இது பொருளாதார செயல்பாடுகளைத் தூண்டும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா 8சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.