அ.தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், 2026 தேர்தல் வெற்றிக்கு கட்சி ஒன்றிணைப்பை வலியுறுத்தி, அண்மையில் பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடுவை விதித்தார். அ.தி.மு.க.விலிருந்து ஏற்கெனவே பிரிந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் பசும்பொன்னில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்தச் சூழலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகம் வந்தார். சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து, தனது எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்த நிலையில், நேற்று சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு சென்ற செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்கள் 500 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்நிலையில் செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே செங்கோட்டையனை தொடர்ந்து பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.