வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமான கலிதா ஜியா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 23-ம் தேதி தலைநகர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் ஆகியவற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி முதலே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கலிதா ஜியா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 80. இதுதொடர்பாக வங்காள தேச தேசியவாத கட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், வங்காளதேச தேசியவாதக் கட்சி தலைவர்-முன்னாள் பிரதமர் கலிதா ஜியா நம்மிடையே இல்லை என்று தெரிவித்தது.
கலிதா ஜியா 2 முறை பிரதமராக பதவி வகித்தார். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையும் பிரதமாக இருந்தார். அவர் வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஆவார். கடந்த 1960-ம் ஆண்டு அப்போதைய ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரகுமானை திருமணம் செய்தார். வங்காளதேச சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய ஜியாவுர் ரகுமான், வங்காளதேச தேசியவாத கட்சியை உருவாக்கி 1977-ம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்றார். 1981-ம் ஆண்டு மே மாதம் ஜியாவுர் ரகுமான் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் 1984-ம் ஆண்டு வங்காள தேச தேசியவாத கட்சியின் தலைவராக கலிதா ஜியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கலிதா ஜியா கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பின் சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையேதான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கலிதா ஜியா தனது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்வி, 10-ம் வகுப்பு வரை சிறுமிகளுக்கு இலவசக் கல்வி, பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்விக்காக உணவுத் திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிதா ஜியா உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவரது மகன் தாரிக் ரகுமான் லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் வங்காளதேசம் திரும்பிஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் தாரிக் ரகுமான் மீது பல வழக்குகள் தொடரப்பட்டு இருந்த நிலையில் அந்த வழக்குகளை இடைக்கால அரசாங்கம் ரத்து செய்தது. இதையடுத்து தனது தாய் கலிதா ஜியாவை பார்க்க தாரிக் ரகுமான் நாடு திரும்பினார்.
அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் பிரதமர் காலிதா ஜியா டாக்காவில் காலமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், வங்காளதேச மக்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான இழப்பைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் மன வலிமையை வழங்குவாராக. 2015-ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற அவருடனான எனது சந்திப்பை நினைவுகூர்கிறேன். அவரது தொலைநோக்குப் பார்வையும், மரபும் நமது கூட்டாண்மையை தொடர்ந்து வழிநடத்தும் என்று நம்புகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.