வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம், பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு ரெப்போ விகிதத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கும். கடந்த 3 நாட்களாக ரிசர்வ் வங்கி இது தொடர்பாக ஆலோசித்த நிலையில், இன்று ரெப்போ விகிதம் குறித்து தனது முடிவை அறிவித்துள்ளது.

அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் நாம் வாங்கும் கடன்களுக்குச் செலுத்தும் இ.எம்.ஐ. என்பது ரெப்போ வட்டி விகிதத்தைப் பொறுத்தே இருக்கும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தான் கட்டப்படுத்தும். பொருளாதாரம், பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கும்.

ரெப்போ வட்டி விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டியாகும். இந்த வட்டி அதிகமாகும்போது வங்கிகள் நமக்குத் தரும் கடன்களின் வட்டியும் உயரும். இதனால் இஎம்ஐ அதிகரிக்கும். இந்த வட்டி விகிதம் குறையும்போது வங்கிகள் நமக்குத் தரும் கடன்களின் வட்டியும் குறையும். இதனால் இ.எம்.ஐ. குறையும்.