ராமேஸ்வரம், அக். 17-

ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி மழைநீர் தேங்கியது.

வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்கியதால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருக்கோயில் உபகோயிலான லட்சுமண தீர்த்தம் கோயிலை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பக்தர்கள் சிரமப்பட்டு கடந்து சென்றனர்.

மேலும் தங்கச்சிமடம் விக்டோரியா நகரில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தை சுற்றிலும் தேங்கிய மழைநீரை ஊழியர்கள் அகற்றினர்.