சிவகங்கை, அக். 17-

அண்டை மாநிலங்களில் இருந்து நெல் வரத்து குறைவு, பருவ மழை பொய்த்ததால் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில், கிலோ ரூ.100 தொட்டு விடுமோ என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் புதுவயல் பள்ளத்துாரில் நவீன அரிசி ஆலைகள் உள்ளன. ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா, தமிழ்நாட்டில் தஞ்சை புதுக்கோட்டை காஞ்சிபுரம் பகுதிகளிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு புதுவயல் பள்ளத்துார் பகுதிகளில் அரவை நடக்கிறது.

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பருவமழை பெய்யும் மாதங்களான ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழைப்பொழிவு இல்லாததால் நெல் விவசாயம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரக்கூடிய நெல் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நெல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 4,500 வரை உயர்ந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அரிசி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அரிசி விலை கிலோ ரு.20 முதல் 40 வரை உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில்; அரிசி ,பருப்பு, எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. டீலக்ஸ், கல்சர், ஆர்.என்.ஆர்.,உட்பட அரிசி விலை கிலோவிற்கு ரூ.20 முதல் 40 வரை உயர்ந்துள்ளது. உயர் ரக அரிசி விலை ரூ.70 ல் இருந்து 110 வரை உயர்ந்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை தொடங்கி தொடர்ந்து பொங்கல் வரை பண்டிகை காலம் ஆகும்.

ஏழை, நடுத்தர குடும்பங்கள் பெரிய சுமையை சந்திக்க நேரிடும். அத்தியாவசிய பொருட்களான அரிசி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் நலச்சங்க, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் கூறுகையில்: தமிழகத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உட்பட நெல் வரக்கூடிய மாநிலங்களில் மழை இல்லை. இதனால், ஆலைகளில் நெல் இருப்பு குறைந்துள்ளது. கிலோ ரூ.30 க்கு இருந்த நெல் விலை தற்போது ரூ. 55 ஆக உயர்ந்துள்ளது.

அண்டை மாநிலங்களில் இப்போது மழை பெய்தால் கூட அடுத்த 60 நாட்களில் நெல் வரத்து அதிகரிக்கும். நெல் வரத்து அதிகரித்தால் அரிசி விலை குறையும். அரிசி விலை உயர்வு நிரந்தரமல்ல என்றார்.