விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபசேவின் மகன் நமல் ராஜபக்சே, தற்போது விஜய்க்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே. இவர் தற்போது இலங்கை பொதுஜன முன்னணி கட்சியின் தலைவராகவும் எம்.பியாகவும் உள்ளார். மலேசியாவில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு, விஜய்யை தனது பேவரைட் நடிகர் என்றும் அவரை சினிமா உலகில் ரொம்பவே மிஸ் செய்வோம்.. அவரது அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் நமல் ராஜபக்சே பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நமல் ராஜபக்சே கூறியிருப்பதாவது:- அரசியல் என்பது ஒரு ஸ்கிரிப்ட் கிடையாது. அது முழு நேர பொறுப்பாகும். மக்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கும். அவற்றை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும். அவரது அரசியல் பயணம் என்பது எல்லைகளை கடந்து ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த நம்பகத்தன்மை அவரது செயல்பாடுகளை பொறுத்தே அமையும்.

விஜய் இன்னும் அரசியல்வாதியாக சோதிக்கப்படாதவராக உள்ளார். ஒரு நடிகராக, அவருக்கு வயது, திறமை மற்றும் நேரம் அனைத்தும் சாதகமாக உள்ளன. அரசியலை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் மக்கள், தொகுதிகளை பற்றி புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் செய்ய முடிந்ததை மட்டுமே வாக்குறுதியாக கொடுங்கள். பின்னர் அதை நிறைவேற்றுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். விஜய் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது விஜய் மற்றும் அவரது கட்சியினரின் பொறுப்பு. அரசியலில் யதார்த்த நிலை என்பது மிகவும் வித்தியாசமானது. அந்த யதார்த்தம் விரைவில் தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.