நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த் வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்! ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றும் ரஜினியின் ஸ்டைல் மேஜிக் ரசிகர்களை பல்லாண்டு மகிழ்விக்கட்டும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.