மதுரை, அக். 18-

மதுரை தவெகவில் கட்சி பதவி மற்றும் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம் கேட்டு மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ உதவியாளர் பேசும் ஆடியோ சமூக வலை

தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மத்திய தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மதார் பதூருதீன். பின்னர், தவெகவில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டபோது, மதுரை மத்திய மாவட்டம் பிரிக்கப்பட்டு, அதன் மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ மதார் பதூருதீன் நியமிக்கப்பட்டார்.

தனது மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி பதவி, கவுன்சிலர் சீட் உள்ளிட்டவைக்காக எம்எல்ஏ தரப்பு பெரும் தொகை வசூல் செய்வதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் கட்சி பதவி, கவுன்சிலர் சீட்டுக்காக பல லட்சம் ரூபாய் கேட்டு மத்திய தொகுதி எம்எல்ஏ மதார் பதூருதீனின் உதவியாளர் கனி என்பவர் பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பர

பரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏவின் உதவியாளர் கனி, கட்சி நிர்வாகி ஒருவரிடம் பேசும் ஆடியோவில் கூறியதாவது:

எத்தனை மணிக்கு கிளம்புறீங்க.. சேப்பாக்கம் வந்துருங்க.. வரும்போது அமவுண்ட்டை கையில் கொண்டு வந்துருங்க. அவர் முன்னால உங்கள வச்சு தான் பேசப்போறேன். முதலில் ரூ.5 லட்சம், பின்னர் 20ம் தேதி ரூ.10 லட்சம் கன்பார்ம் பண்ணிக்கோங்க. பிறகு எந்த வார்டு என மறுவரையறை வந்தவுடன் பேசிக்கிருவோம்…இப்போதான் உதயசூரியன், ஆதவ் வந்துருக்காரு. அவருக்கு ரூம் போட்டு கொடுத்துட்டு வந்துருக்கேன். அண்ணே உங்களுக்குனு ஒரு மரியாதை எப்போதும் இருக்கும். இதுவரை உங்களிடம் நடித்தது கிடையாது. ஓபன் தான். எந்த காரில் வருவீங்க..

இருங்க தனபாண்டியன் அண்ணனிடம் தருகிறேன் எனக் கூறி போனை மற்றொரு நபரிடம் கொடுக்கிறார். அப்போது பேசிய நபர், ‘’அண்ேண… வணக்கம் அண்ணே… சீக்கிரம் வாங்க. கேம் விளையாடல, சீட்டு விளையாடிகிட்டு இருக்கோம். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் வாங்க, வாங்க… அண்ணே… எப்போதும் தனித்துவமாக அரசியல் பண்ணுங்க.. கூட்டு வேண்டாம்னே. அவர்கள் நம்பிக்கை துரோகிகள், உங்களை 100 சதவீதம் நம்புவேன்’’ இவ்வாறு உரையாடல் செல்கிறது.

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ உதவியாளர் எனக் கூறப்படும் நபர், பேரம் பேசும் இந்த ஆடியோ வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இருந்து கட்சிக்காக உழைத்த பலருக்கு பதவி கொடுக்காமல், தற்போது தேர்தலில் வெற்றி பெற்றவுடன் காசு வாங்கி கொண்டு புதிதாக கட்சிக்கு வருபவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குகின்றனர் என மதுரையை சேர்ந்த தவெக கட்சியினர் சிலர் புலம்புகின்றனர்.

தூய சக்தி, மக்களுக்கான ஊழலற்ற ஆட்சி என பேசி வரும் ஆளும் தவெக, இது போன்ற எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் உடனிருப்போர் செய்யும் செயலுக்கு நடவடிக்கை எடுக்குமா என்பது தான் மக்களுடைய கேள்வியாக உள்ளது.