சிவகங்கை, அக்.8:மின்னணு கழிவு மேலாண்மை விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு சேகரிப்போர், மின்-கழிவு மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின் கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.


மேலும், அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு சேகரிப்பு நிறுவனங்கள் மூலம் மின் கழிவுகளைப் பிரித்தெடுப்போர், மறு சுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும். விதிகளை மீறினால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் மின் கழிவு இடமாற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரித்தெடுப்போர் மற்றும் மறு சுழற்சி செய்பவர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் மின் கழிவு கையாளுபவர்கள், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு செயல்பட வேண்டும்.


மின் கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறு சுழற்சி செய்பவர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இதற்கான விவரங்கள் **[www.tnpcb.gov.in](http://www.tnpcb.gov.in)** என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.