மாற்றம் என சொல்லி விலை ஏற்றத்தை கொடுத்துள்ளது தவெக அரசு
திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் கேள்வி
சென்னை, அக். 16-
மாற்றம் என சொல்லி விலை ஏற்றத்தை கொடுத்துள்ளது தவெக அரசு என்றும், ‘சோறுதான் திங்குறாரா?’ என்று அமைச்சர் வெங்கடரமணனுக்கு சவால் விட்டு திமுக இணைச் செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில மாற்றத்தை தருகிறேன் என்று ஆட்சிக்கு வந்த விஜய் அரசு, மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது மட்டுமில்லாமல், விலை ஏற்றத்தை கொடுத்திருக்கிறது. உதாரணத்துக்கு, சாமானிய மக்கள் பயன்படுத்தும் அரிசி, திமுக ஆட்சியில் 25 கிலோ, 26 கிலோ உள்ள அரிசி மூட்டை 1400 ரூபாய்க்கு விற்றது. இன்று இருக்கக்கூடிய தவெக ஆட்சியில 1800 ரூபாய்க்கு விற்கிறது.
இட்லி அரிசி திமுக ஆட்சியில் ரூ.900க்கு விற்றது. இன்று முதல்வர் விஜயோட ஆட்சியில் ரூ.1200க்கு விற்கிறது. அதே மாதிரி துவரம் பருப்பு ரூ.100க்கு குறைவாக விற்பனையானது. இன்று ரூ.142க்கு விற்கப்படுகிறது. உளுத்தம் பருப்பும் ரூ.130க்கு வந்துவிட்டது. சர்க்கரை விலை அதிகமாக இருக்கிறது. பருப்பு விலை, எண்ணெய் விலை, காய்கறி விலைகள் எல்லாம் அதிகமாகிவிட்டது. இதனால் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் உணவுத்துறை அமைச்சர், தமிழ்நாட்டில், அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களின் விலை ஏறவில்லை என்கிறார். அவர், அரிசி சோறுதான் திங்குறாரா?. கடைக்கு சென்று அரிசி வாங்கியிருந்தால் விலைவாசி பற்றி தெரியும். நான் உணவுத்துறை அமைச்சரை சவாலுக்குக் கூப்பிடுறேன்.
அவர் இருக்கக்கூடிய மயிலாப்பூருக்கே நான் வாரேன். நான் பையை எடுத்துட்டு வரேன், அவரும் பையை எடுத்துட்டு வரட்டும். ஒரு மளிகைக் கடைக்குப் போகலாம், பொருளை வாங்கலாம், காய்கறி கடைக்குப் போகலாம், பொருளை வாங்கலாம். உள்ளபடியே விலை ஏறி இருக்கா இல்லையா என்பதை நாட்டு மக்களுக்குக் காட்ட ஊடகங்களான நீங்களும் வாருங்கள். இந்த சவாலுக்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் வர தயாரா?. நான் நிரூபித்து காட்டினால் அமைச்சர் பதவியை விட்டு விலகுவதற்கு, ராஜினாமா செய்வதற்கு தயாரா?. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு. இன்னொரு பக்கம் மின்கட்டணம் உயர்வு. மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
முதல்வர் சார், தமிழ்நாட்டை முடிச்சிட்டீங்க சார், சுத்தமா முடிச்சிட்டீங்க, சாமானியன் வயிற்றில் அடித்துவிட்டீர்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு விலைவாசியில் தான் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. தூக்கத்திலிருந்து முதல்வரே வெளியில் வாருங்கள், இன்னும் அவர் பித்துப் பிடித்த மாதிரியே இருக்கிறார். மக்கள் ஏன்டா இந்த அரசை தேர்வு செய்தோம் என்கிறார்கள். அமைச்சர்கள் எல்லாம் நிர்வாகம் தெரியாமல் சிக்கி தவிக்கிறார்கள். செவிலியர்கள், அரசு ஊழியர்கள் எல்லாம் போராடுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஏமாத்து பேர்வழிகள். அதாவது ஒன்னாம் நம்பர் சீட்டு, 420 கவர்மென்ட் இது. இந்த அரசே ஒரு திருட்டு அரசு. இவ்வாறு அவர் கூறினார்.