தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ.க. ஆயத்த வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பா.ஜ.க. தலைவர்களுடன் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதில் தேர்தல் யுக்திகள் தொடர்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் அசாம் மாநிலத்துக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 22-ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை வரும் அவர் தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரம், புதிய கட்சிகளை கூட்டணிக்கு வரவைப்பது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகளுடம் ஆலோசனை நடத்துவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.