மதுரை தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி இதற்கு அடிக்கல் நாட்டினார். மே 22, 2024-ல் தொடங்கப்பட்ட இந்த கட்டுமான பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கல்வி வளாகம், வெளி நோயாளிகளின் மருத்துவ சேவைகள், மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய கட்டிடங்கள் போன்றவை முழு வீச்சில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதனால் 2026 பொங்கல் பண்டிகையின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்த ராவ் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் 42 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மருத்துவமனை கட்டி முடிப்பதற்காக அக்டோபர் 26-ம் தேதியை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நீடித்த நிலைத்தன்மையை மையமாக கொண்டு உலகளாவிய தர நிலைக்கேற்ப கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் கல்வியாண்டு முதல் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகளையும், புற நோயாளிகள் பிரிவையும் தொடங்கும் அளவுக்கு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.