கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், துணை முதல்வராக இருக்கிறார். ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, இரண்டரை ஆண்டுக்கு பின், சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டு தருவதாக சித்தராமையா வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்பட்டது.

ஆதரவு கொடுங்கள் இதன்படி, காங்கிரஸ் அரசு அமைந்து, கடந்த 20-ம் தேதியுடன் இரண்டரை ஆண்டு முடிந்தது. முதல்வர் பதவிக்குகாய் நகர்த்திய சிவகுமார், 20-ம் தேதி இரவு, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லிக்கு அனுப்பி வைத்தார். உஷாரான சித்தராமையா, பெங்களூரு வந்த கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்.

சித்தராமையா, சிவ குமார் இருவருமே முதல்வர் பதவிக்கு முரண்டு பிடிப்பதால், பிரச்னையை ராகுலிடம் தள்ளிவிட கார்கே முடிவு செய்தார். ராகுலுடன் மொபைல் போனில், 20 நிமிடங்கள் கார்கே பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பொறுமையாக இருங்கள். உங்களை அழைக்கிறேன் என்று ராகுலிடம் இருந்து சிவகுமாருக்கு மொபைல் போனில், மெசேஜ் வந்ததாக தகவல் வெளியானது. இதனால், நான்கு நாட்களாக முகம் வாடிய நிலையில் காணப்பட்ட சிவகுமார், மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.

இந்நிலையில், சித்தராமையாவின் ஆதரவாளரான பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை, இரவு பெங்களூரில் ஒரு ஓட்டலில் சிவகுமார் சந்தித்து பேசினார். அப்போது, 'நான் முதல்வராக ஆதரவு கொடுங்கள். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை உங்களுக்கு வாங்கி கொடுக்கிறேன். தேவைப்பட்டால், உங்களை துணை முதல்வராகவும் நியமிக்கிறேன் என சிவகுமார் டீலிங் பேசியதாகவும் கூறப்படுகிறது.