திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகிற 29-ம் தேதி வெல்லும் தமிழ்ப்பெண்கள் மேற்கு மண்டல மாநாடு நடக்க உள்ளது. இந்நிலையில், மாநாட்டு திடலை பார்வையிடுவதற்காக கோவை விமான நிலையத்திற்கு சென்ற கனிமொழி எம்.பி.க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது,

தொழில்துறையினர், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிச்சயமாக, அனைத்து தரப்பு மக்களையும் சந்திப்போம்.

குறிப்பாக கோவையில் உள்ள தொழில் முனைவோரை உறுதியாக சந்திப்போம். மக்களின் தேவை என்ன என்பதை கேட்டறிந்து, எதையெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் தேர்தல் அறிக்கையில் அளிக்க உள்ளோம். தேர்தல் அறிக்கை என்பது வெறும் எண்ணிக்கைகளின் தொகுப்பாக இருக்காது. தமிழக சட்டம் ஒழுங்கை பாராட்டிய ஆற்காடு நவாப் முகமது குறித்த கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக பல பொய்யான விமர்சனங்களை சில பேர் வைப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தேர்தல் முடித்த பிறகுதான், எந்தக் கட்சிக்கு வாக்கு எவ்வளவு வாக்குகள் சென்றுள்ளன என மிக தெளிவாக தெரியும். நாங்கள் நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். அடுத்த முறையும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தொடரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பேசினார்.