புதுடெல்லி, அக். 9-
எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், சக ஆணையர்களின் ஒப்புதலின்றி தன்னிச்சை
யாகச் செயல்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
ஞானேஷ்குமாரின் தன்னிச்சையான இந்த முடிவுகள், குறிப்பிட்ட ஒரு கட்சியின் தேர்தல் வெற்றிக்குச் சாதகமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக்கிளப்பியுள்ளது. குறிப்பாக, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் மூலமாக நாடு முழுவதும் 13 கோடிக்கும் அதிகமான குடிமக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், இதற்குக் காரணமான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர், மாணவர் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ‘கரப்பான் பூச்சி கட்சி’யின் (சிஜேபி) சார்பாகக் கடந்த அக்டோபர் 2 அன்று ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, இன்று பெங்களூரில் சப்பல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த போராட்டத்தில், சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ், ஆஷ் கோஷ், நேஹா போரா மற்றும் யூடியூபர் துருவ் ரத்தி உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தானும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் பேசுகையில், ‘வாக்காளர் சீர்திருத்தப் பட்டியலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பெங்களூர் ஃப்ரீடம் பார்க்கில் இன்று காலை 10:30 மணி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம், கடந்த அக்டோபர் 3 அன்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்திய சிஜேபி, இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, வருகின்ற அக்டோபர் 10 அன்று டெல்லியில் சிஜேபியினர் போராட்டம் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.