ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ம் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். மெரினா கடற்கரையில் மட்டும் 1,000 போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். அதோடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துகளால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு எவ்வளவு நேரம் அனுமதிக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.